கனடாவில் காலிஸ்தான் தலைவர் இந்தர்ஜீத் சிங் கோசல் கைது..!
கனடாவில் காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த இந்தர்ஜீத் சிங் கோசல் கனடா காவல் துறையினரால் கைது செய்தப்பட்டுள்ளார். பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியைப் பயன்படுத்தியது உள்ளிட்ட ஏராளமான குற்ற வழக்குகளின் கீழ், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கோசல் மற்றும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட அர்மான் சிங் (23) மற்றும் ஜக்தீப் சிங் (41) ஆகியோரும் ஒஷாவா நீதிமன்றத்தில், இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அவரது கனேடிய பிரதிநிதி நத்தலி ட்ரூயின் ஆகியோர் கடந்த வாரம் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார் அதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காலிஸ்தான் அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு பிறகு, காலிஸ்தான் அமைப்பின் ஒருங்கிணைப்பாளr கோசல் பதவியேற்றார். இவர் தனி காலிஸ்தானுக்கான பொது வாக்கெடுப்பு நடத்த கோரி பிரசாரம் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தர்ஜீத் சிங் கோசல் “சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்” எனும் பிரிவிணைவாத அமைப்பிலும் உறுப்பினராகச் செயல்பட்டு வருகின்றார். அத்துடன் அவர் பயங்கரவாத அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனலுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.