யுஜிசியின் விதிமுறைகளுக்கு எதிராக கேரளாவில் தீர்மானம் நிறைவேற்றம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதியன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள்-2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள்-2025 ஆகிய இரண்டு வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சர் முக ஸ்டாலின், டெல்லி, இமாச்சல பிரதேசம், ஜம்மு- காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா சட்டப் பேரவைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வழியுறுத்தியிருந்தார். மேலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல் என்றும் நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம் என்றும் அந்தந்த மாநில முதலமைச்சர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் கேரளா மாநில சட்ட பேரவையில் இன்று(ஜன.21) யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், யுஜிசியின் விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதை திரும்ப பெற்று புதிய விதிமுறைகளை வெளியிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.