#Kerala | பால் ஆலை ஊழியர் ஒருவர் பால் தொட்டியில் குளிப்பதாக வைரலாகும் வீடியோ உண்மையா?
கேரளாவில் உள்ள ஒரு பால் ஆலையில் ஊழியர் ஒருவர் பால் தொட்டியில் குளிப்பது போல வீடியோ ஒன்று வைரலானது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பில் வைரலான வீடியோ போலியானது என நிரூபிக்கப்பட்டது.
தொழிற்சாலையில் உள்ள பால் தொட்டியில் ஆண் ஒருவர் குளிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கேரளாவைச் சேர்ந்த பால் ஆலை ஒன்றில் எடுக்கப்பட்டதாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை விஸ்வாஸ் நியூஸ் ஆய்வு செய்தபோது, இந்த வீடியோ கேரளாவில் இருந்து எடுக்கப்பட்டது இல்லை எனவும், இது 2020 இல், துருக்கி கொன்யாவில் உள்ள பால் ஆலைக்குள் ஊழியர் ஒருவர் பால் தொட்டியில் குளித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ எனவும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
முகநூல் பயனரான Rrajesh Datta நவம்பர் 5 அன்று இந்த வீடியோவைப் பகிர்ந்து, "கேரளாவில் உள்ள ஒரு பால் தொழிற்சாலையின் காட்சியைப் பாருங்கள். ஒரு முஸ்லீம் நபர் பால் தொட்டியில் குளிக்கிறார், அதே பால் சந்தையில் பேக் செய்யப்பட்டு விற்கப்படுகிறது” என மேற்கோள் இட்டுள்ளார்.
விசாரணை:
இந்த காணொளி முன்பு ஒருமுறை வைரலானது, அந்த வீடியோவும் ஆராயப்பட்டது. அந்த நேரத்தில், இந்த இடுகையின் உண்மைத்தன்மையை அறிய, கூகுள் ரிவர்ஸ் இமேஜில் வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டைத் தேடினோம். மேலும் 8 நவம்பர் 2020 அன்று Asia Net News.com இல் பதிவேற்றப்பட்ட கோரிக்கை தொடர்பான வீடியோ அறிக்கையைக் கண்டறியப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, துருக்கியில் உள்ள பால் பண்ணையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பால் தொட்டியில் குளிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து, வீடியோவில் பார்த்த நபர் மற்றும் வீடியோ எடுத்தவர் இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் பால் பண்ணை தற்காலிகமாக மூடப்பட்டது.
நவம்பர் 12, 2020 அன்று பஞ்சாப் கேசரி டிவியின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ தொடர்பான செய்தியும் கண்டறியப்பட்டது . அந்த செய்தியில், 'துருக்கியின் கொன்யா மாகாணத்தில் உள்ள அன்டோனியம் மாகாணத்தில் உள்ள பால் ஆலையில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ வைரலானதை அடுத்து, வீடியோவில் பார்த்தவர் மற்றும் வீடியோ எடுத்த நபர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதா என்று முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடப்பட்டதில், அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த செய்தியும் வரவில்லை. கேரளாவைச் சேர்ந்த ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் எம்.எஸ்.பிரசாந்திடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவை சேர்ந்தது அல்ல என்றும், அங்கு அப்படியொரு சம்பவம் வெளிச்சத்துக்கு வரவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
விசாரணையின் முடிவில், தவறான உரிமைகோரல்களுடன் இந்த வீடியோவைப் பகிர்ந்த பயனரை நாங்கள் விசாரித்தோம். Rrajesh Datta என்ற பயனர் டெல்லியில் வசிப்பவர் என்பதையும், அந்த பயனரை சுமார் 3.6 ஆயிரம் பேர் பின்தொடர்வதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
முடிவு:
இந்த வீடியோ கேரளாவில் உள்ள எந்த பால் ஆலையிலும் நடைபெறவில்லை எனவும், 2020ம் ஆண்டு வைரலான வீடியோ துருக்கியில் எடுக்கப்பட்டது எனவும், அங்கு ஒரு ஊழியர் கொன்யாவில் உள்ள பால் ஆலைக்குள் பால் தொட்டியில் குளித்த வீடியோ எனவும் உறுதி செய்யப்பட்டது.