அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் யானைகளை ஈடுபடுத்துவது குறித்து வேதனை தெரிவித்த கேரள உயர் நீதிமன்றம்! புதிய கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு!
அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் யானைகளை பயன்படுத்த பல கட்டுப்பாடுகளை விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கோயில் திருவிழாக்கள், அணிவகுப்புகளில் யானைகள் அதிகம் பயன்படுத்தபடுவதாகவும், அவை துன்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இது குறித்து கேரளா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயசங்கரன், கோபிநாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது விலங்குகளின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், பாரம்பரியம் மற்றும் மதப் பழக்கவழக்கங்கள் என்ற போர்வையில், திரையிடப்பட்ட வணிகச் சுரண்டலின் ஒரு வடிவமாக இந்த நடைமுறைகள் இருப்பதாக விமர்சித்த அவர்கள், திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயம் எந்த மத நடைமுறைகளிலும் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை” என தெரிவித்தனர்.
மேலும் சிறைபிடிக்கப்பட்ட யானைகள் பெரும்பாலும் வியாபார பொருட்களாகவே பார்க்கப்படுகின்றன. உரிமையாளர்கள் விலங்குகள் நலனைக் காட்டிலும் லாபத்தில்தான் அதிக கவனம் செலுத்துகின்றனர். 2018 இல் பதிவு செய்யப்பட்ட 509 யானைகளில், 160 யானைகள் தற்போதுவரை இறந்துள்ளன” என தெரிவித்தனர்.
தனிப்பட்ட மனிதர்களால் பராமரிக்கப்படும் பல யானைகளுக்கு முறையான சான்றிதழ்கள் இல்லை. இதுகுறித்து அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் திருவிழா, அணிவகுப்புகளுக்கு யானைகளை பயன்படுத்த பல கட்டுப்பாடுகளை விதித்தனர்.
- யானைக்கு அரசு கால்நடை மருத்துவர் வழங்கிய உடற்தகுதி சான்றிதழ்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொது சாலைகளில் யானைகள் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை.
- யானையை ஒரு நாளில் 125 கி.மீ.க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது. ஒரு நாளில் எந்த யானையையும் வாகனத்தில் 6 மணி நேரத்திற்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது.
- இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை யானையை வாகனங்களில் ஏற்றிச் செல்லக் கூடாது.
- இரண்டு யானைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 3 மீட்டர் தூரம் இருக்க வேண்டும்.
- வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கூடாது என கேரளா ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
- நிழலான, சுத்தமான தங்குமிடங்கள், குறைந்தபட்சம் 8 மணிநேர ஓய்வுடன் கூடிய மாதிரி உணவு அட்டவணையை பின்பற்ற வேண்டும்.
- யானைகள் ஒரு நாளைக்கு 30 கி.மீக்கு மேல் நடக்கக் கூடாது.
மேலும் வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல், பின்னங்காலில் நின்று வணக்கம் செலுத்துதல் போன்றவற்றிற்கு யானைகளை பயன்படுத்த கூடாது” என உத்தரவிட்டனர்.