கேரள பாஜக தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கு: 15 பேருக்கு மரண தண்டனை!
கேரள பாஜக ஓபிசி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் ஆழப்புழாவில் SDPI கட்சியின் மாநிலச் செயலாளாரக இருந்த கே.எஸ்.ஷஹான் இரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் தான் ஷஹானை வெட்டிக் கொலை செய்ததாக எஸ்டிபிஐ கட்சி குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து அடுத்த 24மணி நேரத்தில் கேரள பாஜக ஓபிசி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்டார். ரஞ்சித் ஸ்ரீனிவாசன் தனது குடும்பத்தினர் முன்னிலையிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டைக் கொலை சம்பவம் கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
இதனைத் தொடர்ந்து இரண்டு வழக்குகளும் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாஜக ஓ.பி.சி பிரிவு மாநிலச் செயலாளார் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை விதித்து மாவேலிக்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நைசாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லம், சலாம் பொன்னாட், அப்துல் கலாம், சஃபாருதீன், முன்ஷாத், ஜசீப் ராஜா, நவாஸ், ஷெமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி பூவத்துங்கல் மற்றும் ஷம்னாஸ் அஷ்ரப் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்து அவர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.