கேரள தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை விவகாரம் - 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 13 பேரிடம் விசாரணை!
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த, 18 வயதாகும் தடகள வீராங்கனை, குழந்தைகள் நலத்துறையில் சமீபத்தில் புகார் அளித்தார். அதில், தான் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதாக குறிப்பிட்டிருந்தார். குழந்தைகள் நலத்துறை பரிந்துரையின்படி, இதுகுறித்து 'போக்சோ' சட்டத்தின் கீழ், பத்தனம்திட்டா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ஐந்து ஆண்டுகளில், சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர், அவரது நண்பர்கள் மற்றும் சிறுமியின் பயிற்சியாளர் உட்பட, 60க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக இதுவரை, 20 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட தடகள வீராங்கனை, காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 60க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, 18 வயது தடகள வீராங்கனை புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், 5 ஆண்டுகளாக சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் 13 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.