கேரளா | ‘கூகுள் மேப்’பை நம்பியதால் ஆற்றில் விழுந்த கார்!
கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு கூகுள் மேப்பின் உதவியுடன் காரில் சென்ற இரு இளைஞர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
சொந்த வாகனங்களில் வழி தெரியாத புதிய இடங்களுக்கு செல்வது என்றால் முன்பெல்லாம் வழியில் வரும் மக்களிடம் கேட்டு கேட்டு சென்று விடுவார்கள். தற்போது தகவல் தொழில் நுட்பம் பெருகிவிட்டதால், யாரிடமும் வழி கேட்காமல் கூகுள் மேப் உதவியுடன் சென்றுவிடுகின்றனர்.
சில நேரங்களில் கூகுள் மேப் உதவியுடன் செல்லும் போது நடந்து செல்லும் பாதையில் போய் கார் சிக்கிக் கொண்ட நிகழ்வுகளும் நடைபெற்று இருக்கின்றன. அதுபோல, கூகுள் மேப்பை நம்பி சென்று வாகனத்தோடு நீர்நிலைகளில் சிக்கிக் கொண்ட சம்பவங்களும் கேரளாவில் அடிக்கடி நடப்பதை காண முடிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கூட ஆலப்புழா அருகே கூகுள் மேப் பார்த்து காரில் சென்ற இளைஞர்கள், காருடன் ஓடை ஒன்றில் சிக்கி கொண்டனர். பின்னர் உள்ளூர் மக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். அதேபோல் ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.
கேரளாவில் இருந்து இரு இளைஞர்கள் கா்நாடகாவில் உள்ள மருத்துவமனைக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றனர். அப்போது, கேரளாவின் காசர்கோடு அருகே உள்ள பள்ளஞ்சி அருகே சென்ற போது தரைப்பாலம் இருந்துள்ளது. கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருவதால் பாலம் தண்ணீரில் மூழ்கியது.
இது தெரியாத அந்த இளைஞர்கள் கூகுள் மேப்ஸ், அந்த வழியாக செல்லலாம் என காட்டியதால், அதை நம்பி காரை ஓட்டியுள்ளர். அப்போது கார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அங்குள்ள ஒரு மரத்தில் கார் சிக்கிக் கொண்டது. காரில் இருந்த இளைஞர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவர்களை பத்திரமாக மீட்டனர்.