#Kenya | ஒலிம்பிக் வீராங்கனை ரெபேக்கா செப்டேஜியை தீ வைத்து எரித்த காதலன்!
கென்யாவில் வசிக்கும் உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவில் வசிக்கும் உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டிரான்ஸ் நஸோயா கவுண்டி காவல்துறை அதிகாரி ஜெரமையா, “இந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் 44 வது இடம் பிடித்த வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி. கடந்த செப். 1-ம் தேதி மேற்கு டிரான்ஸ் நஸோயா கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் காதலனுடன் ஏற்பட்ட ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, ரெபேக்காவின் காதலன் டிக்சன் என்டிமா பெட்ரோலை ரெபேக்கா மீது ஊற்றி அவரை எரித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் என்டிமாவுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. மேலும், இருவரும் எல்டோரெட் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவுண்டியின் பல தடகளப் பயிற்சி மையங்களுக்கு அருகில் இருக்கும் வகையில் டிரான்ஸ் நஸோயாவில் ரெபேக்கா செப்டேஜி நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். இதனால், கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது” என்றார்.
கடந்த 2022-ம் ஆண்டு இதேபோல் கென்யாவில் பிறந்த பஹ்ரைன் தடகள வீராங்கனையான டமரிஸ் முத்தீ கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். 2023-ம் ஆண்டில், உகாண்டா ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரான பெஞ்சமின் கிப்லாகாட் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.