காஷ்மீரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்... இல்லையென்றால் போர் - ராம்தாஸ் அத்வாலே அறிவிப்பு!
காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் மீண்டும் மோதல் ஏற்படுகிறது. எனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிரதமர் மோடி கைப்பற்ற வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் காஷ்மீர் இருக்கும் வரை, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். எனவே பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கையகப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் பேசியவர், காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை என்றால் போரை அறிவிக்க வேண்டும். பாகிஸ்தான் அந்தப்பகுதியை விட்டு வெளியேறவில்லை எனில், இந்தியா போர் புரிய தயங்காது என எச்சரித்துள்ளார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் தற்போது சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்ததால் பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் மகிழ்ச்சி கிடைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.