உலகின் மிகப் பெரிய 5-வது பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்!
உலகின் மிகப் பெரிய நாடுகளில் 5-வது நாடாக இந்தியா மாறியுள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று, புதிய அரசு பதவியேற்ற நிலையில் நடைபெறும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டுக் குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கும், மீண்டும் மக்களவைத் தலைவராக பதவியேற்றுள்ள ஓம் பிர்லாவுக்கும் வாழ்த்துகள்.
ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். 60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 3-வது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் இந்த முடிவு வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாற்றுவதற்கான நம்பிக்கை. மக்களவைத் தேர்தல் உலகின் மிகப்பெரிய தேர்தலாக நடந்துள்ளது.
சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 11-வது இடத்தில் இருந்து 5-வது பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது. இன்று உலக வளர்ச்சியில் இந்தியா 15% பங்களிப்பை வழங்குகிறது. இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது.
கொரோனா, போர்ச் சூழல்களை கடந்து இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்களால் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது.
வரும் கூட்டத் தொடரில், இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட், அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் எதிர்கால நோக்கங்களை கொண்டதாக இருக்கும். புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளன. விவசாயம், தொழில்துறை, சேவைத் துறைக்கு சமமான முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. விரைவிக் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும்.
சிறிய நகரங்களுக்குகூட விமான போக்குவரத்து வசதி கிடைத்துள்ளன. சாலைகள் உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பல பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு காணும் என்று உலக நாடுகள் நம்புகின்றன.
விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. இதுவரை 3.20 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசு அமைந்தவுடன் ரூ. 20 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டது. நாட்டில் உள்ள ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோர் அதிகாரம் பெற்றால் தான் வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும். எனவே அவர்களுக்கு நமது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
ஜூலை மாதம் முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வரும். இனிமேல் தண்டனை அல்ல, சட்டங்கள் மூலம் நியாயம் கிடைக்கும். சுதந்திரத்துக்கு பிறகு செய்ய வேண்டியதை தற்போது அரசு செய்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு அவசரநிலை அறிவிக்கப்பட்ட நாள் ஒரு கருப்பு தினம். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம். அவசர நிலை பிரகடனம் என்பது அரசியலமைப்பு மீதான தாக்குதல். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கும் செயலில் ஈடுபடக் கூடாது. வதந்திகளை பரப்பக் கூடாது. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது.” எனத் தெரிவித்தார்.