#Kashmir | பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்!
ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு நடந்த துப்பாக்கி சண்டையில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்.18 , 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்.8ம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. அதேநேரத்தில், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காஷ்மீரின் கீட்ஷ்வார் மாவட்டத்தில் சாட்ரோ என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் சாட்ரோ பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அபப்போது, பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்புபடையினர் சுற்றி வளைத்தனர்.
அப்போது, இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், இருவர் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போன்று கத்துவா மாவட்டத்திலும் நடந்த சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.