கரூர் துயரம் : பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கும் விஜய்,,?
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது
தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினரை விஜய் வீடியோ கால் மூலம் ஆறுதல் கூறினார். மேலும் நேரில் சந்திப்பதாகவும் உறுதியளித்ததாக தகவல் வெளியானது. ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திப்பதற்கான விஜயின் கரூர் வருகையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரை சென்னையில் வைத்து விஜய் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். விஜயை சந்திப்பதற்கான தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். விஜய் சந்திப்புக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜயை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேரில் சந்திப்பதற்கு அழைப்பு விடுக்கச் சொல்லி கட்சி தலைமை சார்பில் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.