மயிலாடுதுறை ஶ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு!
மயிலாடுதுறை ஶ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்தையும் அடி முடி தெரியாவண்ணம் பிரம்மர், விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததை நினைவூட்டும் விதமாக கோயில்களில் பனைஓலை கொண்டு கோபுரம் போல் வடிவமைத்து தீபம் ஏற்றப்படும் ஜோதியை தரிசனம் செய்தால் முக்தி கிட்டும் என்பது ஐதீகம்.
இந்த சொக்கபனை நிகழ்வு திருக்கார்த்திகை நன்னாளில் சிவாலயம் உள்ளிட்ட ஆலயங்களில் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயில் உருவில் அம்பாள் சிவனை வழிபட்ட ஆலயமான ஶ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் சொக்கபனை தீபம் ஏற்றப்பட்டது. மேலும் பஞ்சமூர்த்திகள் மாயூரநாதர் வெளிமண்டபத்தில் எழுந்தருளிய போது மகாதீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து கீழவீதியில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை சிவாச்சாரியார்கள் எடுத்து வந்து சொக்கபனை கொளுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா சென்ற போது உபகோயில்களில் சொக்கபனை ஏற்றப்பட்டது. இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.