கர்நாடக முதற்கட்ட தேர்தல் பாஜகவிற்கு சாதகமாக இல்லையோ? - மத்திய அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் குறித்து சு.வெங்கடேசன் எம்பி கேள்வி!
கர்நாடக முதற்கட்ட தேர்தல் பாஜகவிற்கு சாதகமாக இல்லைபோல அதனால்தான் மத்திய அரசு வறட்சி நிவாரணம் அறிவித்துள்ளது என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் ஒட்டுமொத்தமாக சுமார் 60.96 சதவிகிதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கேரளாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. மறுபுறம் பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று, பொதுமக்கள் நிர்பந்திக்கப்பட்டதால் மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு நடத்த காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
இதனிடையே, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தனது வாக்குப்பதிவு செயலியில் வெளியிட்ட தோராயமான புள்ளிவிவரங்களின்படி, மாநில வாரியான வாக்குப்பதிவின் அடிப்படையில், திரிபுரா அதிகபட்ச வாக்குப்பதிவை பெற்றுள்ளது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மிகக் குறைந்த வாக்குகளே பதிவாகியுள்ளன.
கேரளா, கர்நாடகாவில் 14 தொகுதிகள் , ராஜஸ்தானில் 13 மக்களவைத் தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஜம்மு தொகுதி, உத்தரப் பிரதேசத்தில் எட்டு இடங்கள், திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதி, அவுட்டர் மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதி, அசாமில் 5 இடங்கள், மேற்கு வங்கத்தில் 3 இடங்கள் மற்றும் பீகாரில் ஐந்து தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணமாக ரூ.275கோடியை மத்திய அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது..
” கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ ரூ.38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்.” என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.