#Karnataka | சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி - ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளித்த கர்நாடக ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் சித்தராமையாவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், தான் எந்த தவறையும் செய்யவில்லை எனவும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் சித்தராமையா கூறி வந்தார். அதன்படி, ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னதாக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஒப்புதல் அளித்த கர்நாடக ஆளுநரைக் கண்டித்து இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அந்த வகையில், கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகைகள் வைத்துக் கொண்டு, முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். அதேபோல், பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் நடைபெறும் போராட்டத்தில் துணை முதலமைச்சர் சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். போராட்டக்காரர்கள் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.