கர்நாடகா : விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் புகுந்த லாரி - 8 பேர் உயிரிழப்பு!
கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் லாரி புகுந்து விபத்திற்குள்ளானது. ஒரு பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர்மீடியனில் மோதி விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் மீது வேகமாக மோநியதி. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தார் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் சித்தராமையா, மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.