அரசு அலுவலகங்களில் புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை - கர்நாடக அரசு உத்தரவு!
அரசு அலுவலகங்கள் மற்றும் அவற்றின் வளாகங்களில் ஊழியர்கள் புகைபிடிக்க மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்த கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
அரசு அலுவலகங்களில் சிகரெட், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை உட்கொள்வதாக புகார்கள் வந்துள்ளன. சட்டப்பூர்வ எச்சரிக்கைகளை மீறி பொது அலுவலகங்கள் மற்றும் அவற்றின் வளாகங்களில் புகையிலை பொருட்கள் உட்கொள்வது அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
எந்தவொரு அரசாங்க ஊழியர்களும் புகைபிடித்தல், புகையிலை பொருட்களைப் பயன்படுத்துதல் ஒரு பொது அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான எச்சரிக்கை வாசகங்களுடன் கூடிய அறிவிப்பு பலகை, அலுவலகங்களில் பொருத்தமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இதை மீறி, அலுவலகம் அல்லது அலுவலக வளாகங்களில் புகையிலை பொருட்கள்( குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை) போன்றவற்றை உட்கொள்வது, புகைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோன்று பொது இடத்தில் போதை தரக்கூடிய எந்த ஒரு பானத்தையும், போதைப் பொருளை உட்கொள்வதும் தடை செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.