கர்நாடக தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில், கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதில் ஒன்றாக கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் இரண்டு முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் அவர், கடந்த மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜக அரசு தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினர். அத்துடன் கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேடு தொடர்பாக சில‘ஆதாரங்களையும்’ அவர், வெளியிட்டாா்.
இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் "வாக்குச்சாவடி அதிகாரி வெளியிட்ட தரவுகளின்படி, ஒரு குறிப்பிட்ட பெண் வாக்காளர் இருமுறை தேர்தலில் வாக்குப்பதிவு செய்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.ஆனால் விசாரணையில், அந்த வாக்காளர் தான் ஒரேயொருமுறையே வாக்குப்பதிவு செய்ததாக கூறியுள்ளார். ராகுல் காந்தி காட்டிய ஆவணங்கள் மேற்கண்ட தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்டதல்ல என்பது தேர்தல் ஆணைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகவே, மேற்கண்ட ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்தால் இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள முடியும் என்று கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.