கண்ணகி நகர் கார்த்திகாவை ஊக்கத்தொகை அளித்து பாராட்டி பைசன் படக்குழு..!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் பைசன். இப்படத்தில் துருவ் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பைசன் படக்குழுவினர் சார்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் கண்ணகி நகர் கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று அவருக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். மேலும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் பைசன் படக்குழுவின் சார்பாக கார்த்திகாவிற்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 லட்சமுமாக ₹10 லட்சத்திற்கான காசோலையை இயக்குநர் திரு.மாரிசெல்வராஜ் வழங்கினார்.
பைசன் திரைப்படம் சாதாரண அடிமட்டத்திலிருந்து தேசிய அங்கீகாரத்திற்கு உயர்ந்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரான மணத்தி கணேசனின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். அந்த வகையில் ஆசிய கபடி போட்டியில் தங்க வென்ற கார்த்திகாவையும், அவரது கண்ணகி நகர் கபடிக்குழுவின் பைசன் படக்குழு பாராட்டியுள்ளது.
