ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுத்த கனிமொழி எம்.பி. - கையெடுத்து கும்பிட்ட நபரால் நெகிழ்ச்சி!
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தின் நடுவே வந்த ஆம்புலன்ஸ்க்கு கனிமொழி எம்.பி வழி ஏற்படுத்தி கொடுத்தார். அப்போது ஆம்புலன்ஸ் உள்ளே இருந்த நபர் கையெடுத்து கும்பிட்ட காட்சி காண்பவரை நெகிழச் செய்தது.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.
இவற்றில் திமுக எம்பிக்கள் 22 பேர் வெற்றி பெற்றனர். திமுகவின் மக்களவை – மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட்டார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி ஆகியோர் போட்டியிட்டனர். கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் 2 முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார். எனவே, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லிங்கம்பட்டி, திட்டங்குளம், நாலாட்டின்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, மக்கள் அளித்த மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.
நாலாட்டின்புத்தூர் பகுதியில் கனிமொழி எம்.பி., பேசுகையில், அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்ததால் பேச்சினை நிறுத்தினார். தொடர்ந்து மக்களை ஆம்புலன்ஸ்க்கு வழி விடுமாறு கேட்டுக் கொண்டார். உடனடியாக கூட்டத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ்சில் இருந்தவர் கையெடுத்து கனிமொழி எம்பியை பார்த்து கும்பிட்டவாறு சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.