கனிமொழி எம்.பி. தலைமையிலான இந்திய குழு ரஷ்ய வெளியுறவு குழுவுடன் சந்திப்பு!
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் உலகநாடுகளுக்கு விவரிக்க, அனைத்து கட்சி எம்.பி.-களை உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. இதில் ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா, திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் உள்ளிட்ட 7 பேரின் தலைமையில் அமைக்கப்பட்டது.
இந்த குழுக்களில் இருந்து முன்னனதா சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழு ஜப்பான் சென்று அங்குள்ள உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். அதே போல் சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். தொடர்ந்து கனிமொழி எம்.பி தலைமையிலான குழு ரஷ்யா பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கனிமொழி எம்.பி. தலையிலான குழு ரஷ்ய வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இது குறித்து கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எங்கள் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, ரஷ்யாவின் சர்வதேச விவகாரங்களுக்கான குழுவின் முதல் துணைத் தலைவர் ஆண்ட்ரி டெனிசோவ் மற்றும் புகழ்பெற்ற செனட்டர்களிடம், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒன்றுபட்ட மற்றும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைத்ததோம், பயங்கரவாதம் தொடர்பாக பரஸ்பர அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவில் சமாஜ்வாதி கட்சியை சார்ந்த எம்.பி ராஜீவ் ராய், பாஜக கட்சியை சார்ந்த எம்.பி கேப்டன் ப்ரஜேஷ் சௌட்டா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.பி பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி கட்சி கட்சியை சார்ந்த அசோக் குமார் மித்தல், தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு ரஷ்யாவுக்கு பிறகு லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளது.