நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய #Kanimozhi எம்.பி!
டெல்லியில் நடைபெற்ற நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இதில் பெரும்பான்மை இடங்களை பிடித்து தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது.
இதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா நேற்று பதிவியேற்று கொண்டார். பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்டோர் கலந்துக்கொண்ட நிலையில், திமுக சார்பில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார்.
இந்த பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, டெல்லியில் இன்று (அக்.17) நடைபெற்ற நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துக்கொண்டார். இந்த கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார்.
இது தொடர்பாக கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
"இன்று, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன். அங்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான விவகாரங்கள் குறித்து விவாதித்து அதனை இறுதி செய்தோம்."
இவ்வாறு கனிமொழி எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.