திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக கனிமொழி கருணாநிதி நியமனம்!
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக கனிமொழி கருணாநிதியை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளமும், தெலுங்கு தேசமும் பாஜகவுக்கான தங்களது ஆதரவை உறுதிபடுத்தியதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. நேற்று பிரதமர் மோடி தலையிலான அமைச்சரவையில் கூட்டணி கட்சிகள் உட்பட 72 அமைச்சர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளை வென்றது. இவற்றில் திமுக எம்பிக்கள் 22பேர் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளது. இதனை திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..
- மக்களவை - மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்றத்தின் குழுத் தலைவர் - கனிமொழி கருணாநிதி,
- மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,
- மக்களவை குழுத் துணைத் தலைவர் தயாநிதி மாறன்,
- மக்களவை கொறடா ஆ.இராசா,
- மாநிலங்களவைக்குழுத் தலைவர் திருச்சி சிவா,
- மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவர் மு.சண்முகம்,
- மாநிலங்களவை கொறடா வழக்கறிஞர் பி.வில்சன்,
- இரு அவைகளின் பொருளாளர் எஸ்.ஜெகத்ரட்சகன்,
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.