காஞ்சிபுரம் | கிணற்றில் மிதந்த ஆண் சடலம் - காவல்துறை தீவிர விசாரணை!
காஞ்சிபுரத்தில் கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி கொலையா உயிரை மாய்த்து கொண்டாரா என பல கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சிக்கு உள்பட்ட புலிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (26). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பவித்ரா (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மதுமித்ரா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுயுள்ளது. இதனால் பவித்ரா அவரது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி பவித்ரா தினேஷிற்கு போன் செய்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தன்னை அழைத்து செல்லுமாறும் கூறியுள்ளார். தினேஷ் அழைத்துக் சென்றபோது இருவருக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால், பவித்ராவை தினேஷ் பாதி வழியில் விட்டு சென்றுள்ளார்.
தொடர்ந்து தினேஷை 2 நாட்களாக காணவில்லை என்று அவரது தந்தை சீனிவாசன் கடந்த 17-ம் தேதி சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இன்று கைதண்டலம் கிராமத்தில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற சாலவாக்கம் காவல் ஆய்வாளரின் தலைமையிலான போலீசார், கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டுள்ளனர்.
தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தினேஷ் இறந்து சடலமாக இருந்த கிணற்றில் பவித்ரா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரை மாய்த்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது ஊர்மக்கள் அவரை காப்பாற்றியுள்ளனர். தற்போது பவித்ரா நலமுடன் உள்ளார். அதனால், அவர் உயிரை மாய்த்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை முடிவில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது போலீசார் பவித்ராவை விசாரித்து வருகின்றனர்.