சமூகநீதிப் பாதையில் செல்பவர் #KamalaHarris! ஹரிணி கிருஷ்ணன் பேட்டி!
சமூகநீதியின் பாதையில் செல்பவர் கமலா ஹாரிஸ் என அவரது தெற்காசியாவுக்கான தலைவர் ஹரிணி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிட இருந்த நிலையில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதேபோல குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் போட்டியில் வந்ததிலிருந்தே, அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. கருத்துக் கணிப்புகளும் கமலா ஹாரிஸூக்கு ஆதரவாகவே வருகின்றன.
இந்நிலையில் கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரை அறிவிக்கும் மாநாட்டின் முதல் நாளில் பேசிய ஜோ பைடன் ” அமெரிக்காவின் அடுத்த அதிபராக கமலா ஹாரிஸைத் தேர்ந்தெடுக்க அனைவரும் தயாராக வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டால், உலகத் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அதிபராக அவர் இருப்பார். காரணம், இப்போதே அவர் மீது உலகத் தலைவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. அமெரிக்காவின் ஜனநாயகத்தை அழிவிலிருந்து பாதுகாக்க, டொனால்ட் டிரம்ப்பை தோற்கடிக்க வேண்டும். அதற்கு, கமலா ஹாரிஸை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என ஜோ பைடன் பேசியது பேசு பொருளாகியது.
இந்த நிலையில் கமலா ஹாரிஸுக்கான தெற்கு ஆசியாவின் தலைவரான ஹரிணி கிருஷ்ணன் அவருக்காக சிகாகோவில் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கமலா ஹாரிஸ் , ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரைப் பற்றி ஹரிணி கிருஷ்ணன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அவர் தெரிவித்ததாவது..
“ நான் சந்தித்த மிகவும் அன்பான, சிந்தனைமிக்க மற்றும் இரக்கமுள்ள நபர்களில் முக்கியமானவர் கமலா ஹாரிஸ். அவர் உறுதியானவர் மற்றும் பயமனின்றி எதையும் எதிர்கொள்பவர். அவருடைய அடையாளத்தை ஏராளமானோர் கேள்விக்குள்ளாக்குகின்றனர். அவர் ஒரு இந்தியர். அதில் என்ன சந்தேகம்? அவருடைய தாத்தா அவருக்கு நீதியைக் கற்றுக் கொடுத்தார், அதனால்தான் அவர் சமூகநீதியின் பாதையைத் தொடர்ந்தார். கமலா ஹாரிஸ் தனது அடையாளங்களுக்கு உண்மையாக இருக்கிறார்” என ஹரிணி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.