கள்ளழகர் கோயில் தசாவதார நிகழ்ச்சி - இரவு முழுவதும் கண்விழித்து கள்ளழகரை வழிபட்ட பக்தர்கள்!
கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று இரவு விடிய விடிய நடைபெற்ற தசாவதார நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, இரவு முழுவதும் கண் விழித்து கள்ளழகரை வழிபட்டனர்.
மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா முதல் நாள் ஏப்.19ல் காப்பு கட்டுதல், திருவீதி உலாவுடன் தொடங்கியது. மூன்றாள் நாள் ஏப்.21-ஆம் தேதி மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்க சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்புடன் தங்கப்பல்லக்கில் அழகர்மலையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.
ஏப்ரல் 22 ஆம் தேதி கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து, ஏப்ரல் 23 ஆம் தேதி கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து இராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனையடுத்து நேற்று வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர் வழிநெடுகிலும் உள்ள மண்டபப்படிகளில் எழுந்தருளினார்.
பின்னர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். நேற்று இரவு திவான் இராமராயர் மண்டபடியில் எழுந்தருளிய கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிருஷ்ண பரமாத்மா, வைகுண்டத்தில் இருக்கும் பரம்பொருள் திருமால் பூலோகத்தை காக்க பல அவதாரங்களை எடுத்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதே தசாவதாரமாகும்.
முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், இராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் ஆகிய 7 அவதாரங்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இறுதியாக மோகினி அவதாரத்தில் கள்ளழகர் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் இரவு முழுதும் கண் விழித்து கள்ளழகரை வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து இன்று இராமராயர் மண்டபடியில் இருந்து அனந்தராயர் பல்லக்கில் இராஜாங்க திருக்கோலத்தில் புறப்பட்ட கள்ளழகர் தல்லாகுளம் சேதுபதி மண்டபத்தை அடைந்தார். அதிகாலை 2.30 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் கருப்பண்ணசாமி இடம் ஆசி பெற்று தனது இருப்பிடமான அழகர்மலைக்கு புறப்பட்டார். இதனையடுத்து 27 ஆம் தேதி 10.32 மணி முதல் 11 மணிக்குள் தனது இருப்பிடமான அழகர்கோவிலுக்கு கள்ளழகர் சென்றடைகிறார்.