கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் –உயிரிழப்பு 49 ஆக உயர்வு!
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோமுகி ஆற்றங்கரை அருகே நந்தவனம் பகுதியில் 18ம் தேதி இரவு சாராயம் வாங்கி குடித்த பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன.அவர்களுக்கு வயிற்று வலி, கண்பார்வை இழப்பு என பாதிப்புகள் ஏற்பட்டன. முதலில் அடுத்தடுத்து 2 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 85க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் காலையில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இவர்களில் நேற்று முன்தினம் 17 பேர் இறந்தனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 25 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 32 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேர், புதுவை ஜிப்மரில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 37 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை.
மேலும் 110 பேருக்கு தொடர்ந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுவை ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 7 பேரும், சேலம் மருத்துவமனையில் 8 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் ஒருவர், புதுவை ஜிப்மரில் 8 பேர் என மொத்தம் 19 பேர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருவதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.