கள்ளக்குறிச்சி விவகாரத்தில் CBI விசாரணை தேவை - ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் CBI விசாரணை தேவை என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவையில் ஏற்கனவே இரண்டு நாட்கள் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க அணிந்து வந்தனர்.
மேலும், கேள்வி நேரத்திற்கு முன்பே கள்ளக்குறிச்சி விவாகரம் தொடர்பாக விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து பேரவை நிகழ்வுகளை புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்து அதிமுக தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் சட்டப்பேரவை இன்று காலை 9:30மணிக்கு தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு திருக்குறளை வாசித்துவிட்டு தொடர்ந்து பேசத் தொடங்கினார். உடனே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு அப்பாவு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகைக்குச் சென்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தனர். அதிமுகவைச் சார்ந்த 61 எம்எல்ஏக்கள் மற்றும் புரட்சி பாரத கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியுடன் சேர்த்து 62 எம்எல்ஏக்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், தம்பிதுரை, சந்திரசேகரன் உள்ளிட்டோர் இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது..
“ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் நீதிமன்றம், காவல்நிலையத்திற்கு அருகிலேயே கள்ளச்சாராயம் விற்றுள்ளனர்; திமுக ஆட்சிக்கு வந்தபின் கள்ளச்சாராயம் தொடர்பாக இரு சம்பவங்கள் நடந்துள்ளன.
ஆளுங்கட்சி ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்திருக்க முடியாது.
கல்வராயன் மலையில் வனத்துறைக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்ச முடியாது. தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு நபர் ஆணையம் அமைத்தாலும் மக்களிடையே நம்பகத்தன்மை ஏற்படவில்லை.
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.