Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கள்ளழகர் திருவிழா: மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை!

01:40 PM Apr 18, 2024 IST | Web Editor
Advertisement

கள்ளழகர் கோயில் திருவிழாவின்போது நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

மதுரையைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  "மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.  அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பானது.  அழகர்
ஆற்றில் இறங்கும் போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக்கடனாக வைத்து
பக்தர்கள் செய்வது வழக்கம்.  இந்த நிலையில் இந்த ஆண்டு கள்ளழகரின் மீது தண்ணீர்
பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும்.  பாரம்பரிய முறையில்
மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி  கள்ளழகர் கோயிலின் இணை ஆணையரால் அனுமதிக்கப்பட்டவர்கள்
மட்டுமே எதிர்சேவை நிகழ்வின் போது கள்ளழகரின் மீது தண்ணீரை பீய்ச்ச இயலும்.
இதனால் என் போன்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.  இது தனிநபரின்
வழிபடும் உரிமைக்கு எதிரானது.  ஆகவே முறையாக முன் அனுமதி பெற்றவர்கள் மட்டும்,
பாரம்பரிய முறையில் கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்ற தனி
நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து
செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சுரேஷ்குமார்,  அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.  இதைத்தொடர்ந்து நீதிபதிகள், " கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது,  பிற மாவட்டங்கள் மட்டுமன்றி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும்  கலந்து கொள்வர்.  லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் பெரும்பாலான பக்தர்கள் வெறும் காலில் நடந்து வந்து கலந்து கொள்வர். கோடை காலத்தில் வெம்மையைக் குறைக்கும் விதமாகவே தண்ணீர் பீய்ச்சப்படுகிறது.

இந்த வழக்கம் வேறு பல கோயில்களிலும் நடைமுறையில் உள்ளது.  இதனால் பலர் நேர்த்திக்கடன் வைத்து தண்ணீர் பீய்ச்சுவர்.  மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவால், தற்போது வரை 7 பேர் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச அனுமதி பெற்றுள்ளனர்.  இது பாரம்பரிய நடைமுறையை பாதிப்பதோடு,  பக்தர்களின் மனதையும் புண்படுத்தும் என கருதுவதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

கள்ளழகர் செல்லும் பாதை மற்றும் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது எவ்வளவு
பேர் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வில் கலந்து கொள்வர்? தற்போது 7 பேர் மட்டுமே தண்ணீர் பீய்ச்ச அனுமதி பெற்றுள்ள நிலையில்,  இது பாரம்பரிய நடைமுறையை பாதிக்காதா?
இவை தொடர்பாக ஏதும் புள்ளிவிவரங்கள் உள்ளதா?  எதனடிப்படையில் நபர்களை தேர்வு செய்கிறார்கள்? என்பது குறித்து அருள்மிகு கள்ளழகர் கோயலின் இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தவிட்டனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை
பிறப்பித்தார்? சட்ட அலுவலர் அல்லது கோவில் நிர்வாகத்திடம் ஆலோசிக்கப்பட்டதா?
என்பது குறித்து விளக்கமளிக்கும் வகையில் அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
என உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags :
Kallagar ThiruvizhaMaduraimadurai collectorMadurai High Court
Advertisement
Next Article