"முதல் முறை கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயம் இல்லை" - மத்திய அரசு!
வங்கிகளில் இருந்து தனிநபர் கடன், வாகன கடன், வீட்டுக்கடன், நகைக்கடன், வீடு உள்ளிட்ட பிற வங்கிக்கடன் பெறுவதற்கு 'சிபில் ஸ்கோர்' அவசியமாகும். இதன் காரணமாக தனிநபரின் கடன் தகுதியை நிர்ணயிக்கும் சிபில் ஸ்கோர் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன. சிபில் ஸ்கோர் போதுமான அளவு இல்லாததால் பலர் கடன் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
இந்த நிலையில் முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், "முதல் முறை வங்கிக்கடன் பெரும் நபர்களுக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக்கூடாது.
முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல என ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதைப்போல கடன் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோரை ரிசர்வ் வங்கி நிற்னயிக்கவும் இல்லை.
ஒழுங்குபடுத்தப்படாத கடன் சூழலில், கடன் வழங்குபவர்கள்தான் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் பரந்த ஒழுங்குமுறை அடிப்படையில் தங்கள் கடன் முடிவுகளை எடுக்கிறார்கள். முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்றாலும், அவர்களது நடத்தை பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.