கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு - வைகையில் இன்று முதல் வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு!
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்று சித்திரை திருவிழா. இதில் முக்கிய நிகழ்ச்சிகளாக பார்க்கப்படும் மீனாட்சிக் திருக்கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்று. ஒரு மாதம் முழுவதும் தயாராகி அதிக நாட்கள் கொண்டாடப்படும் ஒரே திருவிழா சித்திரை திருவிழா தான்.
இந்நிலையில் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்விற்காக, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றிலிருந்து வருகிற 23ஆம் தேதி வரை மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று வைகை பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். அணையில் உள்ள நீர்மின் நிலையம் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மதுரையை விரைவில் சென்றடையும் வகையில், வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை வைகை பொதுப்பணித்துறையினர் திறந்து வைத்தனர்.