For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு - வைகையில் இன்று முதல் வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு!

09:31 PM Apr 19, 2024 IST | Web Editor
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு   வைகையில் இன்று முதல் வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு
Advertisement

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்று சித்திரை திருவிழா. இதில் முக்கிய நிகழ்ச்சிகளாக பார்க்கப்படும் மீனாட்சிக் திருக்கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்று. ஒரு மாதம் முழுவதும் தயாராகி அதிக நாட்கள் கொண்டாடப்படும் ஒரே திருவிழா சித்திரை திருவிழா தான்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் மதுரை மாநகரில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நாளை மறுநாள் 21-ஆம் தேதி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23-ல் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்விற்காக, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றிலிருந்து வருகிற 23ஆம் தேதி வரை மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று வைகை பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். அணையில் உள்ள நீர்மின் நிலையம் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மதுரையை விரைவில் சென்றடையும் வகையில், வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை வைகை பொதுப்பணித்துறையினர் திறந்து வைத்தனர்.

Tags :
Advertisement