பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் ஆசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு!
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ராவின் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுவிற்கு எதிராக மனுத்தாக்கல் செய்ய மாணவி தரப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கலாஷேத்ரா அறக்கட்டளை சென்னை திருவான்மீயூரில் இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்து இருப்பதாக கடந்த மார்ச் மாதம் புகார்கள் எழுந்தது. உலக அளவில் புகழ் பெற்ற மிகப்பெரிய அறக்கட்டளை நிறுவனமாக கலாஷேத்ராவில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த புகாரில் பல விசாரணைகளுக்கு பிறகு அறக்கட்டளையில் பணியாற்றும் பேராசிரியர் ஹரிபத்மன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஏப்ரல் 3 ஆம் அவர்களை கைது செய்தனர். இதனையடுத்து கலாஷேத்ரா நடனப் பள்ளியில் 1995 - 2001 வரை படித்த மாணவி ஒருவர், முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக, அளித்த புகாரில் அவரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
இதற்கு, “இந்த விவகாரத்தில் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர்கள் புகார் அளிக்க முன்வரமாட்டார்கள். ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் மாணவிக்கு மனுத்தாக்கல் செய்ய அனுமதி வழங்கி, விசாரணையை வரும் 22 ஆம் தேதி ஒத்தி வைத்தது.