#justicewillbeserved | குழந்தைகள் கண் முன்னே நாயை சுட்டுக்கொன்ற போலீஸ்! நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை!
அமெரிக்காவில் குழந்தைகள் முன் அவர்கள் வளர்க்கும் நாயை போலீசார் சுட்டுக்கொன்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் டேவன்போர்ட் பகுதியில் சிறுவர்கள் இருவர் தங்கள் செல்லப்பிராணியான நாயுடன் வீடருகே விளையாடியபடி சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்துள்ளனர். அவ்வழியாக வந்த போலீசார் நாயை கயிறு கொண்டு கட்டி வைக்குமாறு அச்சிறுவர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.
இதனை அடுத்து அச்சிறுவர்கள் தங்களது வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று இந்த விவகாரத்தை தங்களது தாயிடம் கூறுகின்றனர். இதற்கிடையில் போலீசார் தங்களது வாகனத்தில் இருந்து இறங்கி வருவதை பார்த்த அந்த வளர்ப்பு நாய் அவர்களை நோக்கி ஓடுகிறது. அப்போது நாய் தாக்க முயன்றதால் போலீஸ் சற்றும் யோசிக்காது அந்த நாயை இருமுறை சுடுகிறார். இதில் படுகாயமடைந்த அந்த வளர்ப்பு நாய் வீட்டருகே ஒடி வந்து தனது உரிமையாளர் கண் முன்னே விழுந்து துடிதுடித்து இறந்து போகிறது. இதனை பார்த்த அந்த பெண் கதறி அழுகிறார்.
இந்த மொத்த நிகழ்வும் அச்சிறுவர்கள் முன்னிலையில் நடக்கிறது. இதனால் அச்சமடைந்த அச்சிறுவர்கள் வெடித்து அழுகின்றனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த கொடூர காட்சியை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள உயிரிழந்த நாயின் உரிமையாளர், சாதாரண காரணத்திற்காக நாயை துடிதுடிக்க சுட்டுக்கொன்ற போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடந்த 22.08.2024 அன்று இந்த சம்பவம் நடந்த நிலையில், தற்போது வரை நாயின் உரிமையாளர் பகிர்ந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் பலர் போலீசாரை கடுமையாக விமர்சித்து வருவதோடு, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.