”நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை” - உச்சநீதிமன்றம்!
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் பங்களாவில் கடந்த மார்ச் மாதம் இரவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்க சென்ற மீயணைப்பு படையினரால் அவரது வீட்டின் அவுட்ஹவுசில் கட்டுகட்டான பணம் இருந்ததை கண்டறியப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் அந்த பணத்தை கைப்பற்றினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும். நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் இன்-ஹவுஸ் விசாரணையும் நடத்தியது. அந்த விசாரணை குழு தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் , உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தன்னை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்ததையும், தனக்கு எதிரான இன்-ஹவுஸ் விசாரணை அறிக்கையையும் எதிர்த்து யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், ”தனக்கு எதிரான விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றும் ,தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், தனது அதிகாரப்பூர்வ இல்லத்தின் அவுட்-ஹவுசில் இருந்து பணம் கண்டெடுக்கப்பட்டதை மட்டுமே வைத்து குற்றத்தை நிரூபிக்க முடியாது. ஏனெனில் விசாரணைக் குழுவாது, கைபற்றப்பட்ட அந்த பணத்தின் உரிமையாளர் யார் என்பதை தீர்மானிக்கவில்லை” என்றும் தெரிவித்திருந்தார்
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ”யஷ்வந்த் வர்மா தரப்பு எழுப்பும் புள்ளிகள் முக்கியமானவை, ஆனால் அவை இன்-ஹவுஸ் குழுவின் விசாரணையின்போது எழுப்பப்பட்டிருக்க வேண்டும். உங்கள் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை. மேலும், இந்த விவகாரத்தில் பாராளுமன்றம் முடிவு செய்யட்டும். என்று தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், கைப்பற்றப்பட்டது உங்கள் பணமா ? இல்லையா ? என்பதை நாங்கள் ஏன் முடிவு செய்ய வேண்டும்? " என கேள்வியெழுப்பினர். இறுதியாக நீதிபதிகள் வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர் .