For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தத்துவம்தான் முக்கியம் என்ற வெற்றிமாறனின் கருத்தில் வேறுபடுகிறேன்” - நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு

‘தலைவர் முக்கியம் இல்லை, தத்துவம் தான் முக்கியம்’ என்ற வெற்றிமாறனின் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன் என நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் பேசியுள்ளார்.
07:15 PM Jan 19, 2025 IST | Web Editor
“தத்துவம்தான் முக்கியம் என்ற வெற்றிமாறனின் கருத்தில் வேறுபடுகிறேன்”   நீதியரசர்  ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு
Advertisement

இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னை நந்தனத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நூலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் பங்கேற்று நூலகத்தை திறந்து வைத்தார்.

Advertisement

தொடர்ந்து, நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் பேசியபோது,

“ உடலில் எங்கு அடிப்பட்டாலும் கண்ணில் நீர் வடியும். அது போல எங்கு ஒடுக்கம், அநீதி நடந்தாலும் தட்டிக்கேட்கும் மாமனிதர் நல்லக்கண்ணு. அன்பே சிவம் என்பார்கள். சிவமும் அன்பும் ஒன்றுதான். அன்பு இருந்தால்தான் ஒருவரால் பொதுவுடைமை என்கிற சித்தாந்தத்திற்குள் நுழைய முடியும். அந்த வகையில் சிவ பதத்தை எட்டியவர் நல்லக்கண்ணு. அன்பே இல்லாமல் யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் ஒரு கும்பல் அலைந்துகொண்டு இருக்கிறது.

நல்லக்கண்ணு தனது வாழ்க்கையில் நடத்தியதுதான் உண்மையான போராட்டம். ஆனால் போராட்டம் என்கிற பெயரில் போட்டோஷூட் நடத்துகிறார்கள். இது அவலமான செயல். இன்று வாய்ச்சொல் வீரர்கள் அதிகமாகி விட்டார்கள். நிறைய பேசுபவர்கள் செயலில் ஒன்றும் இருக்காது. மக்களும் அவர்கள் பின்னால் சென்று ஏமாற்றம் அடைந்து திரும்புகிறார்கள்.

தேவையான இடங்களில் பேச வேண்டும். பேச்சு தேவை இல்லாத இடங்களில் செயலில் இறங்க வேண்டும். அதற்கு சிறந்த உதாரணம் நல்லக்கண்ணு. 3 தேர்தலில் தோற்றவர் என சிலர் நல்லக்கண்ணுவை குறிப்பிடுவார்கள். நல்லவர்களைச் சிறப்பாக நடத்தக்கூடாது, தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளனர். எவ்வளவு பேர் எம்.எல்.ஏ., எம்.பி. ஆகிவிட்டார்கள். ஆனால், யார் பெயர் நியாபகம் இருக்கிறது. 3 தேர்தலில் தோற்ற, இந்த மக்களால் தேர்தெடுக்கப்படாத நல்லக்கண்ணுவை நம் அனைவருக்கும் தெரியும்.

தேர்தலில் வெற்றி பெறுவது வேறு. பொதுத்தளத்தில் செயல்பாடு என்பது வேறு. இதையேதான் நல்லக்கண்ணுவும் கூறியுள்ளார். எம்.பி., எம்.எல்.ஏ. பதவி முக்கியமில்லை. மக்களுக்காக வாழ வேண்டும் என்பதற்கான உதாரணமாக நல்லக்கண்ணுவை பார்க்கிறோம். அவர் தேர்தலில் தோற்றது அவரின் இழப்பு இல்லை. நம்முடைய இழப்பு.

எந்த எண்ணத்தில் பொதுவாழ்க்கையில் நுழைந்தாரோ... 100 வயதாகியும் அதே எண்ண நிலையில் இருக்கிறார். சம்பாதிக்கும் தளம் இது இல்லை. அதற்கு வேறு இடம் உள்ளது, இது சேவை. மக்களுக்கான வேலைக்காரனாக இருக்க வேண்டும். மக்களுக்கான வேலைக்காரனாக இருக்க முடியாது என்றால் பொதுவாழ்க்கைக்கு வரவேண்டாம்.

நல்லக்கண்ணுக்கு பணத்தை பார்த்தாலே அலெர்ஜி ஆகிவிடுகிறது. அரசு, கட்சி, தனிப்பட்ட மனிதன் என யார் பணம் கொடுத்தாலும் அதை அவர் பிரித்து கொடுத்துவிடுகிறார். ராமகிருஷ்ண பரமகம்சர் மீது பணம் போட்டால் வலியால் துடிப்பார் என்பார்கள். அது போல் நம் கண்முன்னே வாழும் ராமகிருஷ்ண பரமகம்சர்தான் நல்லக்கண்ணு.

இதற்கு காரணம் என்ன என்று கேட்டால், என் தத்துவம்தான் என்று அவர் கூறிவிடுவார். பொதுவுடைமை தத்துவத்திற்கான இலக்கணமாக நல்லக்கண்ணுவின் வாழ்க்கை உள்ளது. விடுதலை 2 படம் குறித்து விமர்சனம் எழுதி இருந்தேன். அந்த படத்தில் ‘தலைவர் முக்கியமில்லை.. தத்துவம் முக்கியம்’ என்று வசனம் வரும். அதில் எனக்கு முரண்பாடு உள்ளது. கோர்பட்சே வரும்பொழுது தத்துவம் என்ன ஆனது?

அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டம் எழுதி முடித்த பிறகு அது இந்த நாட்டிற்கு சரியானதாக இருக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நல்லவரிடம் இருந்தால் சரியாக இருக்கும். கெட்டவர்களிடம் இருந்தால் சரியானதாக இருக்காது. அரசியலமைப்புச் சட்டம் யார் கையில் போய் சேர்கிறது என்பதை பொருத்தே அது தீர்மானிக்கப்படும்’ என்றார்.

அது போலதான் தத்துவம் யாரிடம் உள்ளது எந்த தலைவரிடம் உள்ளது என்பது முக்கியம். அதனால் வெற்றிமாறனின் அந்த கருத்தில் நான் வேறுபடுகிறேன். தத்துவம் நல்லபடியாக செயல்பட வைப்பதற்கு தலைவர் மிகவும் முக்கியம். அதற்கு உதாரணம் 100 வயதை தாண்டி வாழும் நல்லக்கண்ணுதான்.

பணம் படைத்த, அதிகாரம் படைத்த மனிதர்களுக்கு மட்டும்தான் சிஸ்டம் சீக்கிரமாக செயல்படுகிறது. அதில் சட்டத்துறையும் ஒன்று. நல்லகண்ணு போன்ற தலைவர்களை இளைஞர்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும். இவரைப்பற்றி பாட புத்தகத்தில் எழுத வேண்டும். யார் யாரைப் பற்றியோ எல்லா பாடபுத்தகத்திலும் எழுதிகிறார்கள்.

இவரைப்பற்றியும் எழுதினால் அது இளைஞர்களிடம் சென்று இன்னும் பல நல்லக்கண்ணு உருவாகுவார்கள். சிலர் சோசியல் மீடியவை பார்த்து அவர்களை ஆளுமைகள் என நினைத்து ஏமாந்து போகிறார்கள். அறிவியல் தொடர்பான நூல்களை நான் படித்து வருவதால், நல்லக்கண்ணுவின் டி.என்.ஏ.வை எடுத்து வைத்து அதை அடுத்து வரும் சந்ததியினருக்கு செலுத்தி அறிவியல் வளர்ச்சியால் பல நல்லக்கண்ணுக்களை உருவாக்க முடியுமா? என்ற சிந்தனை எனக்கு வந்தது.

அதே போல் இறந்தவர்களை உயிர்பிக்கும் படியான அறிவியல் வளர்ச்சியை நோக்கிச் சென்றுக்கொண்டு இருக்கிறது. நல்லக்கண்ணு காலம் எய்தபின் இவரின் மூளையை எடுத்து வேறு ஒருவருக்கு பொருத்தி இவரை மீட்டெடுக்க முடியுமா? என்ற எண்ணமும் வந்தது. ஆழ்மனதில் இவர் பதிந்துவிட்டதால் இப்படி பட்ட எண்ணங்கள் எனக்கு தோன்றுகிறது”

இவ்வாறு நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் தெரிவித்தார்.

Tags :
Advertisement