‘Just Wait and See’ - கருத்துக்கணிப்புகளுக்கு சோனியா காந்தி பதில்!
“மக்களவை தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை வாக்குகள் எண்ணப்பட்ட உள்ளன. தேர்தல் முடிவடைந்த பின் கணிக்கப்பட்ட பிந்தைய கருத்துகணிப்புகள் அனைத்தும் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளது. இந்நிலையில் முடிவை பொறுத்திருந்து பாருங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோரும் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
“பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக தேர்தல் முடிவுகள் இருக்கும். தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்.
கருணாநிதியின் 100-வது ஆண்டு நிறைவு நாளில் திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. பல சந்தர்ப்பங்களில் அவரைச் சந்தித்து, அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. அவரை சந்தித்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்த கொண்டாட்ட நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.