சென்னையில் ஜெ.பி.நட்டா நடைபயணத்திற்கு அனுமதி மறுப்பு...!
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னையில் நடைபயணம் மேற்கொள்ள சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் யாத்திரையின் 200-வது தொகுதியாக மத்திய சென்னை மாவட்டத்தில் வரும் 11-ல் நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் இறுதியில் சென்னை அமைந்தகரையில் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் திடலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
ஜெ.பி.நட்டா, 11ஆம் தேதி சென்னையில் அண்ணாமலையுடன் பாத யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை தரப்பில் பாத யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, நட்டா பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை சோழிங்கநல்லூரில் நடத்த பாஜகவினர் அனுமதி கேட்டிருந்தனர்.
எனினும், அங்கே கூட்டம் நடத்த அனுமதி கிடைக்கவில்லை. பெருங்குடி அல்லது நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டபோது, வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை.
இதையடுத்து, சென்னை ஷெனாய் நகரில் உள்ள பள்ளி ஒன்றின் வளாகத்தில் பொதுக்கூட்டம் நடத்த பாஜக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்தால் அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று பாஜகவிற்கு ஆதரவு திரட்டிவிட்டு விழா மேடைக்கு ஜெ.பி.நட்டா செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கும் சென்னை காவல்துறை தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.