For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பத்திரிக்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது” - அண்ணா பல்கலை.வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
04:51 PM Feb 04, 2025 IST | Web Editor
“பத்திரிக்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது”   அண்ணா பல்கலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Advertisement

சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தடை விதிக்கக் கோரி பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர் மன்றம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன.

Advertisement

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜோதிமணியன், கே.பாலு, இளங்கோவன், அருண் மற்றும் விவேகானந்தன் ஆகியோர், முதல் தகவல் அறிக்கை காவல் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுசம்பந்தமாக சிறப்பு புலனாய்வு குழு மூன்று முறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அப்போது மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர். அவற்றை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

மேலும், செய்தியில் எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த வழக்கில் பத்திதிகையாளர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த காவல் துறையினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பத்திரிகையாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் உண்மை வர வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். சம்பந்தமில்லாத கேள்விகள் கேட்கப்படுகின்றன. பத்திரிகையாளர்கள் என்ற முறையில் அவர்கள் தங்கள் கடமையைச் செய்தனர் எனவும் வாதிடப்பட்டது.

முதல் தகவல் அறிக்கையை பதிவேற்றம் செய்யும் சிசிடிஎன்எஸ் இணையதளத்தை, என்.ஐ.சி. தான் பராமரிக்கிறது. பிரச்னைக்கு தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என என்.ஐ.சி. இயக்குனர் கூறியிருக்கிறார். இதை கட்டுப்படுத்த வேண்டியது அவர்கள்தான். சட்டத்தை விடவும், நீதிமன்றத்தை விடவும் அதிக அதிகாரம் உள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு கருதக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.

வழக்குக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் 56 கேள்விகளை சிறப்பு புலனாய்வு குழு கேட்டுள்ளது. அவை பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் உள்ளது. ஊடகத்தினருக்கு தடை விதித்தால் ஜனநாயகம் இருக்காது எனவும் பத்திரிகையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. பத்திரிகை சுதந்திரத்தை தடை செய்யவில்லை. சம்மன் மட்டுமே அனுப்பப்பட்டு, விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களை துன்புறுத்தும் எண்ணம் இல்லை. அனைத்து நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என வாதிடப்பட்டது.

விசாரணையின் போது, முதல் தகவல் அறிக்கை பொது ஆவணம் எனக் குறிப்பிட்ட நீதிபதி,

* பத்திரிகையாளர்களிடம் தனிப்பட்ட விவரங்களை ஏன் கேட்கிறீர்கள்?

* பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தினார்களா?

* முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது யார்?

* ஆவணத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் காவல்துறை தான் பதிவேற்றம் செய்துள்ளது. இது யார் தவறு?

* பத்திரிகையாளர்களை தவிர எத்தனை பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது?

* சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளை விசாரித்தீர்களா?

* முதல் தகவல் அறிக்கை எழுதியவரை விசாரணை செய்தீர்களா?

* பத்திரிகையாளர்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள்?

* யாரும் புலன் விசாரணையில் தலையிட முடியாது. குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும்?

* மொபைலை ஏன் பறிமுதல் செய்ய வேண்டும்?

* காவல்துறை இணையதளத்தில் தான் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சரியான நபர்களை விசாரிக்காமல் தேவையில்லாமல் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள்

என சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர், பத்திதிகையாளர்களை
துன்புறுத்த கூடாது எனவும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்களை, விசாரணைக்கு பின் திரும்ப ஒப்படைக்கவும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தார்.

Tags :
Advertisement