தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் - சென்னை வந்தடைந்தார் பினராயி விஜயன்!
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக நாளை (மார்ச் 22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று முதலமைச்சர்கள், மாநில கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தனர்.
தொகுதி மறுவரையறை தொடா்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி.ராமாராவ், கா்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாா், மேற்கு வங்கத்தில் திரிணமுல் கட்சியின் பிரதிநிதி ஒருவா், அதே மாநிலத்தில் இருந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது சலீம் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஒடிஸாவின் பிஜூஜனதா தளத்தின் பிரதிநிதி, அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பக்தசரண் தாஸ், கேரள காங்கிரஸ் பி.ஜே.ஜோசப், ஜோசப் கே.மணி, சமூக புரட்சி கட்சியைச் சோ்ந்த என்.கே.பிரேமசந்திரன், அந்த மாநிலத்தின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோவிந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஸ்வம்,பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான், அகாதலி தளம் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக நாளை நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்றிரவு (20.03.2025) சென்னை வருகை புரிந்தார். தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர்.