“மலையாளப் படத்தில் இணைவது சொந்த வீட்டிக்கு வந்தது போல் உள்ளது” - ஏ.ஆர்.ரகுமான்!
“மீண்டும் மலையாளப் படத்தில் இணைவது எனக்கு சொந்த வீட்டிக்கு வந்தது போல் இருக்கிறது” என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம். இத் திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்) தழுவி எடுக்கப்பட்டதாகும். மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார்.
கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக் கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு. 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது. நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.
வரும் மார்ச் 28 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் மோகன்லால், பிருத்விராஜ், நடிகைகள் அமலா பால், நயன்தாரா, ஜிம்மி ஜீன் லூயிஸ், கே.ஆர். கோகுல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ரிக் அபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது:
“சினிமா, நல்ல விசயம், கதைகள், மனிதநேயம் போன்றவற்றை நம்பும் பிளெஸ்ஸி மாதிரி ஆர்வம் மிகுந்த இயக்குநருடன் வேலை செய்வது மிகவும் மரியாதைக்குரியது. அவருடன் வேலை செய்வதில் இருந்து பல விசயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். அவர் மிகவும் பொறுமையான மனிதர். இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு நன்றி. இந்தப் படம் நம்முடைய பலபேரின் கதையைப் பற்றியது. நாமும் ஏதோ ஒரு வகையில் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். சில மனிதர்களுக்கு மனச்சிக்கல் இருக்கும் அதுபோல இந்தப் படத்தில் ஒருவர் பாலைவனத்தில் மாட்டிக்கொள்கிறார். இருந்தும் இந்தக் கதையை, பல மனிதர்கள் தங்களுடன் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.
மீண்டும் மலையாளப் படத்தில் இணைவது எனக்கு சொந்த வீட்டிக்கு வந்தது போல் இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு சிறந்த படத்தின் மூலம் வருவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்தப் பயணம் மிகவும் சுவாரசியமானது” எனப் பேசினார்.