வசூலை குவிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் - திரைகள் அதிகரிப்பு!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருவதையடுத்து, தமிழ்நாட்டில் மேலும் பல திரையரங்குகளில் படத்தை திரையிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதாலும், ஜப்பான் படத்தின் கடும் தோல்வியால் இப்படத்தின் முதல்நாள் வசூலை விட அடுத்தடுத்த நாள்களின் வசூல் அதிகரித்தன. தொடர்ந்து இப்படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாரான ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி வெளியீட்டாக வந்தன. இதனால், 4 ஆண்டுகள் கழித்து கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரையரங்க வெளியீடாக வந்ததால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில், இப்படம் வரவேற்பைப் பெற்றத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மேலும் 100 திரைகளில் படத்தை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.