இலக்கிய விருதை புறக்கணித்த ஜெசின்டா கெர்கேட்டா!
புகழ்பெற்ற கவிஞரும், பத்திரிக்கையாளருமான ஜெசின்டா கெர்கேட்டா இந்தியா டுடே குழுமத்தால் அறிவிக்கப்பட்ட இலக்கிய விருதை ஏற்க மறுத்துள்ளார்.
இந்தியா டுடே குழுமத்தால் 'ஆஜ் தக் சாஹித்யா ஜக்ரிதி உதயமன் பிரதிபா சம்மன்' எனும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஜெசின்டா கெர்கேட்டாவின் 'ஈஸ்வர் அவுர் பசார்' எனும் புத்தகம் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதோடு 50,000 ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விருதை ஏற்க ஜெசின்டா மறுத்துவிட்டார்.
மணிப்பூர் பழங்குடியின மக்களின் உயிருக்கு ஊடகங்கள் மரியாதையும், முக்கியத்துவமும் அளிக்காமல் இருப்பதே இதற்கு காரணம் என ஜெசின்டா கூறியுள்ளார். மணிப்பூர் மக்கள் தங்கள் உயிருக்கான மரியாதையை இழந்துகொண்டிருந்தபோது, முக்கிய ஊடகங்கள் அனைத்தும் அலட்சியமாக நடந்துகொண்டன எனக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதுவரை எந்த ஊடகமும் பழங்குடி மக்களின் துயரங்களை, மரியாதையான முறையில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததில்லை எனக் கூறியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
”மணிப்பூர் மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்களின் உயிருக்கு மரியாதை மறுக்கப்படும்போதும், மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும், குழந்தைகளும் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும்போதும், எந்த ஒரு விருதாலும் ஒரு கவிஞனையோ, எழுத்தாளனையோ மகிழ்விக்க முடியாது" என தனது எக்ஸ் பக்கத்தில் கெர்கேட்டா பதிவிட்டுள்ளார்.
ऐसे समय में जब देश में आदिवासियों के जीवन का सम्मान खो रहा है. मणिपुर सहित पूरे मध्य भारत के आदिवासियों के जीवन से गरिमामय जीवन गायब हो रहा है. वैश्विक स्तर पर दूसरे समुदाय के लोगों, बच्चों के जीवन पर लगातार हमला हो रहा है. किसी कवि, लेखक को कोई सम्मान कैसे रोमांचित कर सकता है? pic.twitter.com/fuU7escKjT
— Jacinta Kerketta (@JacintaKerkett2) November 23, 2023
ஜெசிந்தா கெர்கெட்டாவின் இந்த கவிதைப் புத்தகம் ஜார்க்கண்டில் உள்ள பழங்குடி சமூகங்களின் வாழ்க்கை மற்றும் இழப்புகளைப் பற்றியது. அவரது கவிதைகள் முழுவதும், நிலம் தொடர்பான மோதல்கள், காடுகளில் வசிப்பவர்களை அந்த பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் திட்டங்களின் தாக்கம் மற்றும் பழங்குடி மக்களிடையே அடித்தள ஜனநாயகம் போன்றவற்றை மையமாக கொண்டு எழுதியவையே ஆகும்.
இந்த புத்தகம் பழங்குடி மக்களின் குரலாக அமைந்துள்ளது. இந்த புத்தகமானது வேற்று மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஜெசிந்தா கெர்கெட்டாவின் இந்த முடிவை மதிப்பதாக இந்தியா டு டே நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.