“ஜெயலலிதா நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்” - உச்ச நீதிமன்றத்தில் ஜெ.தீபா மேல்முறையீடு!
கடந்த 1991-96 வரை தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவிக்கப்பட்டதாக ஜெயலலிதா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஜெயலலிதா வசித்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நகைகள், பொருட்கள் அனைத்தும் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதா நகை தொடர்பான விவகாரத்தில் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கை ஏற்க மறுத்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
மேலும் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஆகியவை வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் பறிமுதல் செய்த சொத்துகள் அரசுக்குதான் சொந்தம் என்பதையும் உறுதி செய்திருந்தது. இந்த நிலையில் ஜெ.தீபா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “ஜெயலலிதா நகைகள் தொடர்பான விவகாரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்றம் ஆகியவை தவறான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் மறைந்த தனது அத்தையான ஜெயலலிதாவின் நகைகளைதான், அவரது அண்ணன் மகளான தீபா கேட்கிறார். அதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. அந்த நகைகளை எப்படி அரசிடம் ஒப்படைக்க முடியும்?.
எனவே இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உரிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். அதேப்போன்று இந்த விவகாரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் நகைகளை தீபாவிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.