நிலவில் வெற்றிகரமாக கால்பதித்த ஜப்பான்...
நிலவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஜப்பான் அனுப்பிய லேண்டர் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பல நாடுகள் விண்கலங்கள் அனுப்பி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த செப்டம்பர் மாதம் 'ஸ்லிம்' எனும் லேண்டர் விண்கலத்தை நிலவை நோக்கி அனுப்பியது. நான்கு மாதங்களுக்கு பிறகு நேற்று இரவு வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 5-வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. நிலவின் மேற்பரப்பில் வெறும் 100 மீட்டர் பரப்புக்குள் துல்லியமாகத் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விண்கலம் 'நிலவின் ஸ்னைப்பர் என்று அழைக்கப்படுகிறது.
தற்போது, லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், இந்த விண்கலம் தனது செயல்பாடுகளில் வெற்றி பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள ஒரு மாத காலம் வரை ஆகலாம் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.