ஜப்பான் நிலநடுக்கம்: 92 பேர் உயிரிழப்பு - 242 பேர் மாயம்!
ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.
ஜன.1-ம் தேதி இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. இதையடுத்து வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினர். ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியது.
இதையும் படியுங்கள்: அம்பானியை மீண்டும் பின்னுக்கு தள்ளிய அதானி – இந்தியாவின் பெரும் பணக்காரரானார்!
இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக 20-க்கும் மேற்பட்ட முறை சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக இஷிகாவாவில் 13 நகரங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மேலும் 370 நிவாரண மையங்களில் 33,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 242 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதையொட்டி உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மீட்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.