அம்பானி வீட்டு குடும்ப விழாவிற்காக 10 நாட்களுக்கு சர்வதேச அந்தஸ்தை பெற்ற ஜாம்நகர் விமான நிலையம்!
அம்பானி வீட்டு குடும்ப விழாவிற்காக குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தை 10 நாட்களுக்கு சர்வதேச அந்தஸ்து பெற்ற விமான நிலையமாக தரம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை திருமணத்துக்கு முந்தைய விழா நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில், இவர்களின் திருமணத் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக ஜூலை 12-ல் திருமணம் நடைபெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெறும் இந்த விழாவில் உலக பணக்காரரர்கள் பில்கேட்ஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், ரிஹானா, இவாங்கா டிரம்ப், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, சவுதி அராம்கோவின் தலைவர் யாசிர் அல்-ருமையன், டிஸ்னி சிஇஓ பாப் இகர், அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும் உலகளாவிய முதலீட்டு மேலாண்மை நிறுவனமான பிளாக்ராக் லாரி, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரூட், கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் போன்றோர் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல், இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், எம்.எஸ். தோனி, சானியா நேவால், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். அம்பானி இல்ல விழாவால் குஜராத்தின் ஜாம்நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதனிடையே, அம்பானி மகன் திருமணத்தை முன்னிட்டு ஜாம்நகர் விமான நிலையத்துக்கு 10 நாட்களுக்கு சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. அதன்படி, ஜாம்நகர் விமான நிலையத்தில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை சர்வதேச விமானங்களை வரவேற்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஜாம்நகர் விமான நிலையமானது பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையம் ஆகும். எனினும், ஒரு பயணிகள் முனையமும் செயல்படுகிறது. இந்த நிலையில் அம்பானி இல்ல விழாவுக்காக மத்திய அரசு சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.
வழக்கமாக 6 சிறிய விமானங்களை மட்டும் கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையத்தில் நேற்று ஒருநாள் மட்டும் 140 விமானங்கள் வந்திறங்கியுள்ளன. அதிகப்படியான விமானங்கள் வரக்கூடும் என்பதால் முன்னதாக திட்டமிட்டு விமான நிலையம் விரிவாக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் முதல் துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது.