#JammuKashmirElection2024 | 2 மணி நேரத்திலேயே வேட்பாளர் பட்டியலை பாஜக திரும்பப் பெற்றது ஏன்?
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திங்கள்கிழமை காலை வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலை இரண்டே மணி நேரத்தில் பாஜக திரும்பப் பெற்றது.
மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் ஓய்ந்திருக்கும் நிலையில், மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது தேர்தல் நடத்தப்படுவதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்கியது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.
இந்நிலையில், காலை 10 மணிக்கு 44 பேர் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டது. ஆனால், சுமார் 12 மணியளவில் அந்த வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை திரும்பப் பெற்றது. சில மாற்றங்களுக்குப் பிறகு புதிய வேட்பாளர் பட்டியலை வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.