#JammuKashmir | தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி உயிரிழப்பு!
காஷ்மீரில் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
காஷ்மீரின் கிஸ்த்வர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் இன்று (நவ. 10) நடந்த என்கவுன்ட்டரில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயம் அடைந்தனர். காஷ்மீரின் கிஸ்த்வர் மாவட்டத்தில் கிராம பாதுகாவலர்கள் நசீர் அகமது, குல்தீப் குமார் ஆகியோரை தீவிரவாதிகள் குந்த்வாரா மற்றும் கேஷ்வான் வனப்பகுதிக்கு கடந்த நவ. 7-ம் தேதி கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் மற்றும் போலீஸார் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், குந்த்வாரா மற்றும் கேஷ்வான் வனப்பகுதியில் பார்த் ரிட்ஜ் என்ற இடத்தில், கிராம பாதுகாவலர்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தை ராணுவத்தினரும், காஷ்மீர் போலீசாரும் இன்று காலை 11 மணியளவில் சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ராணுவத்தின் 16-வது படைப்பிரிவைச் சேர்ந்த ஜூனியர் அதிகாரி (ஜேசிஓ) நாயப் சுபேதார் ராகேஷ் குமார் உயிரிழந்தார். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.