ஜம்மு & காஷ்மீர் சட்டசபை தேர்தல் - 5முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்ட #Congress கட்சி!
ஜம்மு & காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி ஐந்து முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு ஆக. 26ம் தேதி நிறைவு பெற்றது. அதன்படி, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
கடந்த முறை ஆட்சி செய்த கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. பாஜக தனித்து களம் காண்கிறது. தற்போது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் முதற்கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிகள்
- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3000
- 1 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்
- ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் 11 கிலோ அரிசி
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு
- சுய உதவிக் குழுக்களில் ஈடுபடும் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்